வருவாய்த்துறை அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
பொள்ளாச்சியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடந்த விளையாட்டு போட்டிகளை சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடந்த விளையாட்டு போட்டிகளை சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டிகள்
பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கான விளையாட்டி போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டிகளை சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கிரிக்கெட், பூப்பந்தாட்டம், செஸ், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஒட்டப்பந்தயம், சாக்கு போட்டி, கவிதை, வினாடி-வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
செங்காந்தள், அனிச்சம், மகிழம், வாகை என 4 அணிகளாக பிரித்து ஆண்கள், பெண்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டியில் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட சுமார் 100 பேர் கலந்துகொண்டு விளையாடினார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
மன அழுத்தம்
முன்னதாக தொடக்க விழாவில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வருவாய்த்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் பணிச்சுமை இருக்கும். இதற்கான மனஅழுத்தம் இருக்க கூடாது. எந்தவித வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இதற்காக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இது கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.