முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: ஆர்வமுள்ள வீரர்கள் பதிவு செய்ய அழைப்பு
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு ஆர்வமுள்ள வீரர்கள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை மாவட்டம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்னை நேரு ஸ்டேடியம், மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியம், வேளச்சேரி நீச்சல் வளாகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இதில் பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் இருபாலரும் பங்கேற்கும் மாவட்ட அளவிலான 42 போட்டிகள், மண்டல அளவிலான 8 போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கபடி, தடகளம், பேட்மிண்டன், கைப்பந்து, சிலம்பம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், செஸ், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளும் அடங்கும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் தங்களது அனைத்து விவரங்களையும் பதிவு செய்திட வேண்டும். மாவட்ட அளவிலான போட்டியில் டாப்-3 இடங்களை பிடிப்போருக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு சென்னை செனாய் நகரில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் அலுவலகத்தையோ அல்லது 7401703480 மற்றும் 044-26644794 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கேட்டுக் கொண்டுள்ளார்.