சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டி - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான விளையாட்டு் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-10 07:00 GMT

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரு பூங்கா விளையாட்டு திடலில் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து, கால்பந்தாட்ட போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும், மாதவரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் டிரில் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போட்டி அக்டோபர் 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மாநகராட்சி அலுவலர்கள் ஆயிரத்து 109 ஆண்கள், 581 பெண்கள் என ஆயிரத்து 690 பேர் கலந்து கொண்டுள்ளனர். கவுன்சிலர்கள் 55 ஆண்கள், 20 பெண்கள் என 75 பேர் என மொத்தமாக ஆயிரத்து 765 பேர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். கொரோனா, மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பணிபுரிந்து வருகின்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையிலும், உடல் நலனை பேணும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு போட்டியில் கையுந்து பந்து, கால்பந்து, கிரிக்கெட், டென்னிகாய்ட், எறிபந்து, கோகோ, கபடி, இறகுப்பந்து, நீச்சல் போட்டி, சதுரங்க ஆட்டம், தடகள விளையாட்டு, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர்ஸ், லக்கி கார்னர் போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்தநிகழ்ச்சியில் மேயர் பிரியா, இ.பரந்தாமன் எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர், மண்டலக்குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்