குறுமைய விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

Update: 2022-08-17 16:39 GMT


தாராபுரம் கல்வி மாவட்ட அளவிலான குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முதல் தொடங்கப்பட்டன.

விளையாட்டு போட்டிகள்

தாராபுரம் கல்வி மாவட்ட அளவிலான குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.நடராஜ் தலைமை தாங்கி ஒலிம்பிக் கொடி மற்றும் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் தாராபுரம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போதைய 2022-2023-ம் கல்வி ஆண்டில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.

இதன்படி விளையாட்டு போட்டிகளின் முதல் நாளில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான எறிபந்து மற்றும் பூப்பந்து குழு போட்டிகள் நடைபெற்றன. இதில் தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், குண்டடம், முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த குழு அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். முடிவில் இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல், 2-ம் இடம் பெற்ற அணிகள் நடுவர் குழுவினர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பாராட்டு சான்றிதழ்கள்

இந்த பள்ளியில் விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பல்வேறு குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் விளையாட்டு போட்டியின் நிறைவு நாள் அன்று முதல், 2-ம் இடம் பெறும் அணிகளுக்கு பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

தொடக்க விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.வேல்முருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், விளையாட்டு குழு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சிவசக்தி நாட்ராயன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்