பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நாளை மறுநாள் நடக்கிறது

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2022-10-09 18:45 GMT

தமிழக அரசின் உத்தரவின்படி அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்துக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அரியலூர் மாவட்டத்திற்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பேச்சு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்படவுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரததேசமென்று பெயர் சொல்லுவோம் ஆகியவை காந்தி பேச்சு போட்டிக்களுக்கான தலைப்புகள் ஆகும். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்தியசோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகியவை காந்தி பேச்சு போட்டிக்களுக்கான தலைப்புகள் ஆகும். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளது.

இவை அல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்பவர்களில் அரசு பள்ளியை சேர்ந்த 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது. பள்ள மாணவ-மாணவிகளுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மதியம் 1.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கப்படும்.எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குனர் வாயிலாக ஒரு கல்லூரிக்கு 2 பேர் என அந்தந்த கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிக்கு ஒருவர் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்