அண்ணா, பெரியார் பிறந்த நாளன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்

அண்ணா, பெரியார் பிறந்த நாளன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறுகின்றன.;

Update: 2022-09-11 16:36 GMT

பேச்சு போட்டிகள்

தமிழக அரசின் உத்தரவின் படி வருகிற 15-ந்தேதி முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், 17-ந்தேதி பெரியார் பிறந்த நாளை முன்னிட்டும் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் பேச்சு போட்டிகளும், 17-ந்தேதி பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டிகளும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

போட்டிக்கான தலைப்புகள்

பள்ளி மாணவ-மாணவர்களுக்கு தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவருக்கு அண்ணா, அண்ணாவின் மேடை தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆகியவை அண்ணா பேச்சு போட்டிக்கான தலைப்புகள், தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், பெரியாரும் பெண் விடுதலையும் ஆகியவை பெரியார் பேச்சு போட்டிக்கான தலைப்புகள் ஆகும்.

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி! மக்களிடம் செல் ஆகியவை அண்ணா பேச்சு போட்டி தலைப்புகள், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலக சிந்தனையாளரும் பெரியாரும் ஆகியவை பெரியார் பேச்சு போட்டிக்கான தலைப்புகள் ஆகும்.

பரிசுகள்

போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்பவர்களில் அரசு பள்ளியை சேர்ந்த 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மதியம் 1.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குனர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று மேற்கண்ட பேச்சு போட்டிகளில் பங்கேற்கலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்