பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

Update: 2023-07-27 18:30 GMT

பேச்சுப்போட்டி

கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்டரங்கில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ முதல் பரிசும், சோனம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி ரம்யா 2-ம் பரிசும், தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி சுகாஷினி 3-ம் பரிசும் பெற்றனர். நாகனூர் அரசு உயர்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் சரபேஸ்வரன் மற்றும் வரிக்காப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி சோபனா ஆகியோர் சிறப்பு பரிசுகள் பெற்றனர்.

கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மதியம் தொடங்கப்பட்டது. இந்த பேச்சுப்போட்டியில் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி இளங்கலை தமிழ்த்துறை 2-ம் ஆண்டு மாணவி அனு முதல் பரிசும், கோடங்கிப்பட்டி ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இளங்கலை 2-ம் ஆண்டு கணிதவியல் மாணவி ஹர்ஷவர்த்தினி 2-ம் பரிசும், கரூர் ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை முதலாமாண்டு வரலாறு மாணவி தேவதாரணி 3-ம் பரிசும் பெற்றனர்.

முதல் பரிசு ரூ.5 ஆயிரம்

பள்ளிப்போட்டி நடுவர்களாக முதன்மை கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட முதுகலை தமிழாசிரியர்களும், கல்லூரிப்போட்டி நடுவர்களாக கல்லூரிக்கல்வி இணை இயக்குனரால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த்துறை உதவி பேராசிரியர்களும் செயல்பட்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டரால் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்