"ராமநதி-ஜம்புநதி கால்வாய் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்" -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“ராமநதி-ஜம்புநதி கால்வாய் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்று தென்காசியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்

Update: 2022-12-08 18:45 GMT

"ராமநதி-ஜம்புநதி கால்வாய் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என்று தென்காசியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அமைச்சருக்கு பாராட்டு

தென்காசியில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக தன்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கின்ற சாத்தூர் ராமச்சந்திரனை பாராட்டுகிறேன். விருதுநகரைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது உழைப்பின் விருதாக தென்காசி மாவட்டமும் இணைத்து பொறுப்பில் தரப்பட்டுள்ளது. இதையும் தனது சொந்த மாவட்டமாக நினைத்து, இரட்டைக்குதிரையில் திறம்பட சவாரி செய்து, வெற்றிக்கொடி நாட்டக்கூடியவராக அவர் செயல்பட்டு வருகிறார். பிரமாண்டமாக, நேர்த்தியாக உழைப்பவர் மட்டுமல்ல. இட்ட பணியை ஈடு இணையில்லாமல் செய்து காட்டக்கூடியவர். சில வாரங்களுக்கு முன்னாலும், சில நாட்களுக்கு முன்னாலும் அவர் உடல் நலிவுற்றார். ஆனால் உடல் நலிவுற்றிருந்தாலும், தென்காசி விழாவை மிகச்சிறப்பாக நடத்திக்காட்ட வேண்டும் என்று முடிவு செய்து இங்கேயே வந்து தங்கி தனது உடல்நிலையை பற்றி கூட பொருட்படுத்தாமல் இந்த மாவட்ட மக்களுடைய நன்மையை மட்டுமே மனதில் வைத்து இந்த கடமையை நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

ரூ.27¾ கோடி கடன் தள்ளுபடி

தி.மு.க. ஆட்சியின் இந்த 19 மாத காலத்தில் தென்காசி மாவட்டத்தில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கையை மட்டும் நான் சொல்கிறேன். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் 11 ஆயிரத்து 494 மனுக்கள் பெறப்பட்டு 11 ஆயிரத்து 490 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் ரூ.27 கோடியே 77 லட்சம் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 486 பேருக்கு ரூ.24 லட்சத்து 23 ஆயிரத்து 530-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் 41 ஆயிரத்து 980 மாணவ-மாணவிகள் பயனடைந்து உள்ளனர். மகளிருக்கு இலவச பஸ் பயணத்திட்டத்தின் கீழ் 80 லட்சம் முறை கட்டணமில்லாமல் பஸ் பயணம் மேற்கொண்டு மகளிர் பயனடைந்து இருக்கிறார்கள். 2 ஆயிரத்து 935 திருநங்கைகள் பயனடைந்து உள்ளனர். 50 ஆயிரத்து 361 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று இருக்கின்றனர். 73 ஆயிரத்து 491 பயனாளிகளுக்கு 436 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. உழவர்களுக்கு புதிய மின்இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் 13 கோடி ரூபாய் செலவில் 1,823 பயனாளிகளுக்கு புதிய மின்இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 19 ஆயிரத்து 599 பேர் பயனடைந்து உள்ளனர். கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயை 4 லட்சத்து 41 ஆயிரத்து 989 பேர் பெற்றுள்ளார்கள்.

50 ஆயிரம் பனைவிதைகள்

50 ஆயிரம் பனைவிதைகள் மற்றும் பனங்கன்றுகள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் புதிதாக ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 1,701 குடும்பங்களுக்கு வேளாண்கருவி தொகுப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. 150 கோவில்களில் பணிபுரியும் 84 அர்ச்சகர்கள், 6 பட்டாச்சாரியார்கள், 60 பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் மாத ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் புதிய உதவி கலெக்டர் அலுவலகம் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக, தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் சில என்னிடம் தெரிவிக்கப்பட்டன. உடனடியாக அதிகாரிகளை அழைத்து நான் பேசினேன். அவைகள் சிலவற்றை நிறைவேற்றி தருவதற்கான அறிவிப்பை இந்த மேடையிலேயே அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புளியங்குடி-சங்கரன்கோவில் நெடுஞ்சாலை

தென்காசி மாவட்டத்தின் முக்கிய இணைப்பு சாலையாக விளங்கக்கூடிய புளியங்குடி-சங்கரன்கோவில் நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். புதிதாக அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். துரைசாமிபுரம் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பனையூர் கூடலூர்-துரைசிங்கபுரம் சாலை மேம்படுத்தப்படும். தென்காசி-குற்றாலம் இடையே இருக்கக்கூடிய இலத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

சிவகிரி மற்றும் ஆலங்குளம் பகுதி விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று அவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும்.

ராமநதி-ஜம்புநதி கால்வாய் திட்டம்

அதேபோல், இங்கே சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டவாறு, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணிகளுக்கு கடந்த ஆட்சி காலத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முறையான அனுமதி பெறப்படாததால், திட்டப்பணிகள் தொடங்கப்படாமலேயே இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இதற்கான முறையான வனத்துறை அனுமதிகள் பெறப்பட்டு, தற்போது இத்திட்டம் மத்திய வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி பெறப்பட்டவுடன், இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய நலத்திட்ட சாதனைகளின் அரசுதான் தி.மு.க. அரசு.

தென்காசி அலங்கார்நகரைச் சேர்ந்த மாணவி சண்முகவள்ளி 2020-ல் நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் இந்திய அளவில் 108-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் முதலிடமும் பெற்று இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு இந்த விழாவின் மூலமாக முதல்-அமைச்சர் என்கிற முறையில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளுவர் சிலை திறப்பு

தென்காசி கணக்கப்பிள்ளைவலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்த அரசு விழாவின்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வீரவேல் முருகன், இயக்குனர்கள் எம்.வி.எம்.செந்தில்பிரகாஷ், ராஜராஜேஸ்வரி வீரவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற பாதைகளில் எல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கட்சி கொடிகள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு தென்காசி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்