அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.

Update: 2022-10-29 19:38 GMT

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். பரம்பூர் வட்டார சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் சுயமரியாதை கலந்துகொண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் யோகா கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் யோகா கற்றுக்கொள்வது அவசியம். யோகா கற்றுக்கொள்வதன் மூலம் மாணவர்களின் மனதும், உடலும் மேம்படும். மாணவர்கள் சுறு சுறுப்புடனும், மகிழ்ச்சியோடு வாழ, தினமும் காலை நேரத்தில் யோகா பயிற்சி செய்வது அவசியம். பள்ளி மாணவர்கள் யோகா கற்று கொள்வதால், மன அமைதி கிடைப்பதோடு, உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார். தொடர்ந்து வஜ்ராசனம், பத்மாசனம் போன்றவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் பேரிடர் காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் மாணவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றிய விழிப்புணர்வு வழங்கினார். மாணவ- மாணவிகளுக்கு புளு வைரஸ், டெங்கு காய்ச்சல் வராமல் எவ்வாறு தடுப்பது மாணவர்கள் தங்களின் உடல் மற்றும் மன நலன் சரியாக வைத்துக்கொண்டு இருந்தால் மட்டுமே கல்வியில் உயர் நடைபோட முடியும் என்று கூறினார். பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பின்னர் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்