கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

வரலட்சுமி நோன்பையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ளகோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், பெரும்பாலான பெண்கள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தினர்.

Update: 2023-08-25 18:45 GMT

வரலட்சுமி நோன்பு

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு வரலட்சுமி நோன்பு நேற்று கடைபிடிக்கப்பட்டது. சுமங்கலி பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் பெரும் பயனை அடைவார்கள் என்றும், நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவார்கள் என்றும், பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், குழந்தை பேறு, கல்வி, வாழ்வில் வெற்றி உள்ளிட்டவை கிடைக்கும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில் பெரும்பாலான இந்து சமயத்தை பின்பற்றும் பெண்கள் நேற்று வரலட்சமி விரத்தை கடைபிடித்தனர். மேலும், அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வளையல் அலங்காரம்

காஞ்சிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரலட்சுமி பூஜையையொட்டி சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் குத்து விளக்கு பூஜை வைத்து முருகப்பெருமானை வழிபட்டனர். அதேபோல் அங்குள்ள மாரியம்மன் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பள்ளிபாளையம் அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ தேவி அம்மன் கோவிலில் நேற்று மாலை வரலட்சுமி நோன்பையொட்டி சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்