ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-08-03 18:50 GMT

மலை ஏறி வழிபாடு

அரவக்குறிச்சி அருகே உள்ளது ரங்கமலை. இந்த மலையின் உச்சியில் பழமை வாய்ந்த மல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காலை 6 மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாய் மல்லீஸ்வரரை வழிபட ரங்கமலைக்கு வந்தனர். முதலில் மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டு விட்டு 3 கிலோ மீட்டர் மலை ஏறி நடந்து சென்று மல்லீஸ்வரரை வழிபட்டனர்.

தொடர்ந்து கம்பத்து முனியப்பன் சுவாமியை வழிபட்டனர். முன்னதாக மலைக்கு சென்ற பக்தர்களின் பெயர் மற்றும் முகவரிகளை கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினர் வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். ஆடி பெருக்கை முன்னிட்டு கோவில் நிர்வாகக்கமிட்டி சார்பில் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் செய்திருந்தனர்.

லாலாபேட்டை

லாலாபேட்டை கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்பட பல்வேறு வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

நொய்யல்-வேலாயுதம்பாளையம்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் அருகே பவித்திரம் பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

கரூர்

பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, ரூ.15 லட்சம் பண அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்று, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்