கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-01-01 20:02 GMT

சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்தும் உறவினர்கள், நண்பர்களுக்கு கேக் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கியும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை முதலே திருச்சியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

உறையூர் வெக்காளியம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஐம்புகேஸ்வரர் கோவில், கல்லுக்குழி அஞ்சநேயர் கோவில், தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம்

மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலில் மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். காலையில் பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாக இருந்தாலும், மாலையில் உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் சென்றனர்.

இதேபோல் கண்டோன்மெண்டில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவிலிலும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

வயலூர் முருகன் கோவில்

அரியமங்கலம் அருகே ஆயில் மில் மலையப்ப நகரில் உள்ள அய்யப்பன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் ரூபாய் நாணயங்களை கொண்டு சொர்ணாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

வயலூர் முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிங்காரவேலவர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்தனர். அவர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் முடிகாணிக்கை செலுத்தும் மண்டபத்தில் இருந்து நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று கோவிலுக்கு சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

இதேபோல் சமயபுரம் போஜீஸ்வரர் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முசிறி, தொட்டியம்

முசிறியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்ட தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் சந்திரமவுலீஸ்வரர் கோவில், லட்சுமி நாராயண பெருமாள், மகா மாரியம்மன் கோவில், அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் புத்தாண்டை வரவேற்று நள்ளிரவில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதுரை காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் உற்சவ அம்மனுக்கு நவதானியங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதுரா நகரில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பூஜை செய்த ஒரு ரூபாய் நாணயம் மற்றும் லட்டு உள்ளிட்ட இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தைப்பேட்டையில் உள்ள எல்லையம்மன் கோவிலில் பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து அன்னதானம் வழங்கினர்.

தா.பேட்டை

தா.பேட்டை பகுதியில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை பொதுமக்கள், இளைஞர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். வீடுகளின் முன்பாக பெண்கள் வண்ண கோலமிட்டு புத்தாண்டை வரவேற்றனர். மேலும் தா.பேட்டையில் காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பிள்ளாதுரை பெரியமாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி, ராஜகாளியம்மன், என்.கருப்பம்பட்டி வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

அலைமோதிய கூட்டம்

மேலும் சுற்றுலாத்தலமான வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு, மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிகளவில் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்