கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-01-01 18:33 GMT

ஆங்கில புத்தாண்டு பிறப்பு

ஆங்கில வருடமான 2022-ம் ஆண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.59 மணிக்கு முடிவடைந்து நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் புதிய ஆண்டு பிறந்தது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் புத்தாண்டு பிறப்பை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் பலர் நள்ளிரவு கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும், வாணவேடிக்கை நடத்தியும் கொண்டாடினர்.

புதுக்கோட்டை நகரில் பல வீடுகள் முன்பு கோலங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண பொடியில் கோலமிட்டிருந்தனர். அண்ணாசிலை அருகே போலீசார் சார்பில் கேக் வெட்டி பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் வினியோகிக்கப்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி, இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), ரமேஷ் (திருக்கோகர்ணம்), முகமது ஜாபர் (கணேஷ்நகர்) உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களிலும் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜை நடைபெற்றது.

இதேபோல புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள சங்கீத மங்கல விநாயகர், சாந்தநாத சாமி கோவில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு தினத்தையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பலர் ஹேப்பி நியூ இயர் என கத்தியபடி சென்றனர். மதுப்பிரியர்கள் பலர் மது அருந்தி விட்டு வேகமாக இரு சக்கர வாகனங்களில் சென்ற போது அவர்களை போலீசார் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு எச்சரித்து அனுப்பினர்.

புதுக்கோட்டை சத்சங்கம் சார்பில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற கிருஷ்ணர்-ராதா ஜோதி தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆலங்குடி

ஆலங்குடி அருகே நெம்மகோட்டையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைெயாட்டி புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கொண்டு வந்த 1008 லிட்டர் பாலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆலங்குடியிலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அன்னவாசல்

அன்னவாசல் புனித ஹங்கேரி எலிசபெத் அன்னை ஆலயத்தில் அருள் பணியாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் புத்தாண்டு திருவிழா திருப்பலி நடைபெற்றது.

இதேபோல் இலுப்பூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி வழிபாடு மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

கீரனூர்

கீரனூர் அருகே உள்ள வீரமாகாளி அம்மன் கோவில், மலையடிப்பட்டி பெருமாள் கோவில், கொங்கணி கருப்பர், தேரடிக்கருப்பர், ஆஞ்சநேயர் கோவில்கள், பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைெபற்றது.

கீரமங்கலம், திருவரங்குளம்

கீரமங்கலம் மெய்நின்றநாதசுவாமி கோவில், குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில், சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. மெய்நின்றநாத சுவாமி கோவில் தடாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா திறக்கப்பட்டு குழந்தைகள் விளையாடினார்கள்.

திருவரங்குளம் பொற்பனை கோட்டை முனீஸ்வரர் கோவில், அரங்குளநாதர் கோவில், பிடாரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்