பொள்ளாச்சி, வால்பாறையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பொள்ளாச்சி, வால்பாறையில் கோவில் களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, வால்பாறையில் கோவில் களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சூலக்கல் மாாரியம்மன்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை பொள்ளாச்சி அய்யப்பன் கோவில், கடைவீதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், வரதராஜ பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், ஜோதி நகர் விசாலாட்சி கோவில், தாலுகா அலுவலகம் அருகில் உள்ள மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து, பிரசாதம் பெற்றுக் கொண்டனர். இதேபோல் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சூலக்கல் மாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புத்தாண்டு என்பதால் அதிகாலை முதல் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, கேரளா மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாரியம்மனை வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.
வேலாயுதசாமி கோவில்
இதேபோல் கிணத்துக்கடவு பொன் மலை மீது உள்ள வேலாயுதசாமி கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு வேலாயுத சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்மலைமீது நடந்துசென்று வேலாயுத சாமியை தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் கிணத்துக்கடவு சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகி கோவில், கரிய காளியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது காலை முதல் மாலை வரை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அனைத்து கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
வால்பாறை
வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முன்னதாக முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. மேலும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து வள்ளி-தெய்வானையுடன் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.