முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சோமரசம்பேட்டை:
வைகாசி விசாக திருவிழா
வைகாசி விசாகத்தையொட்டி திருச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சோமரசம்பேட்டை அருகே உள்ள வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றம் நடைபெற்று, பின்னர் வைகாசி விசாகத்திற்கு முதல் நாள் தேரோட்டம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி கடந்த பிப்ரவரி 12-ந் தேதி பாலாலயம் நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை. இருப்பினும் விசாகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகனுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் கடந்த 10 நாட்களாக விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். மேலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரம்
வைகாசி விசாகத்தையொட்டி திருச்சி ஜங்ஷனில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணிய நகரில் உள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.