அம்மன்கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன்கோவில்களில் சிறப்பு வழிபாடு

Update: 2023-08-04 18:45 GMT

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் அகல் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

ராகுகால துர்க்கைக்கு சிறப்பு அலங்காரம்

ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்புக்குரிய மாதமாகும். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ள ரௌத்ர துர்க்கை என்னும் ராகுகால துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

அகல் விளக்கு ஏற்றி வழிபாடு

அதேபோல் திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெண்கள் எலுமிச்சை பழ தோலிலும், அகல் விளக்குகளிலும் விளக்கேற்றி வழிபட்டனர். திருவாரூர் காகிதக்காரத்தெரு சீதளாதேவி மாரியம்மமன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுநடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் ஏலவார்குழலியம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் துர்க்கையம்மன், சந்தானராமர் கோவிலில் விஷ்ணு துர்க்கையம்மன், நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோவிலில் மகாமாரியம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி, மரக்கடை தேர்வடக்கு தெருவில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று 3-வது ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், வில்வ பொடி, மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அங்காளம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் உள்ள காமாட்சியம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், உப்புக்காரத்துரை முத்துமாரியம்மன் கோவில், கணக்கன் தெரு ஏழை மாரியம்மன் கோவில், மேல ராஜ வீதி சிங்கமகா காளியம்மன் கோவில், உப்புகாரத்தெரு பாப்பார காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்