மாடுகளை அலங்கரித்து சிறப்பு வழிபாடு

மாட்டுப்பொங்கலையொட்டி மாடுகளை அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Update: 2023-01-16 18:30 GMT

மாட்டுப்பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் வீடுகளில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு அமைப்பினர் பாரம்பரிய விளையாட்டுகள், கலைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தொடா்ந்து நேற்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் பசு மாடுகள், காளைகள் வளர்ப்பவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி கொண்டாடினர். மாடுகள், காளைகளை குளிப்பாட்டி அதற்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் மிட்டு அலங்கரித்து பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். மேலும் பொங்கலை மாடுகள், காளைகளுக்கு கொடுத்தனர்.

பசு மாடுகள்

கிராமப்புறங்களில் ஒரே இடத்தில் மொத்தமாக சேர்ந்து பொங்கல் வைத்து கிராமத்து தெய்வங்களை வழிபட்டனர். மேலும் பசுமாடுகள், காளைகளை அலங்கரித்து வரவழைத்து அதனை பூஜைக்கு பின் அவிழ்த்து விட்ட நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே மேலக்கொல்லை கிராமத்தில் நடந்த விழாவில் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள குளத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர்.

மேலும் பசுமாடுகள், காளைகள், கன்றுக்குட்டிகள், ஆடுகள் வளர்ப்பவர்கள் அதனை அலங்கரித்து அழைத்து வந்தனர். பூஜைக்கு பின் பொங்கல் வழங்கப்பட்ட பின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அப்போது துள்ளிக் குதித்து பசுமாடுகள் ஓடின. மேலும் கன்றுக்குட்டிகள் துள்ளிக்குதித்து ஓடிய போது அதனை சிறுவர்கள் போட்டிப்போட்டு அடக்க முயன்றனர். இதில் கன்றுக்குட்டிகள் பிடிபடாமல் தப்பியோடின.

நாய்க்குட்டி

இந்த நிகழ்வின் போது வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களையும் ஒரு சிலர் அழைத்து வந்து பூஜையில் பங்கேற்றனர். சிறுவர் ஒருவர் நாய்க்குட்டியுடன் கலந்து கொண்டு பூஜை முடிந்ததும் மாடுகளை அவிழ்த்து விட்ட போது, நாய்க்குட்டியை கையில் தூக்கிக்கொண்டு அந்த சிறுவன் வேகமாக ஓடி குளத்தின் கரைக்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்