வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-12 18:11 GMT

வேலாயுதம்பாளையம்,

வைகாசி விசாகம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற புகழிமலை முருகன் கோவில் உள்ளது.இக்கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், தயிர், திருநீறு, பன்னீர், தேன் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

3 முறை வலம் வந்தனர்

தொடர்ந்து சுவாமியை பல்லாக்கில் அமர வைத்து, கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். அப்போது குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் நெய் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.இதேபோல் காகிதபுரம் சுப்பிரமணியர் கோவில், பவித்திரம் பாலமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலசுப்பிரமணியசுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.தொடர்ந்து சுவாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை முதலே திரளான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் படிபூஜை நடைபெற்றது.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதனையொட்டி விநாயகர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து முதல்படியில் வேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஒவ்வொரு படியிலும் வாழை இலையில் தேங்காய், பழங்கள், பூக்கள், வெற்றிலை வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கற்பக விநாயகர்

இதேபோல் கரூர் அண்ணாநகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனையொட்டி பாலமுருகனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலமுருகனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரூரில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நொய்யல்

புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் ெசய்யப்பட்டன. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல் வைகாசி விசாகத்தையொட்டி குளித்தலை, நச்சலூர், தோகைமலை, தரகம்பட்டி, க.பரமத்தி, அரவக்குறிச்சி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்