சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும், முக்கிய விசேஷ நாட்களிலும் இந்த கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். நேற்று தை மாத அமாவாசையையொட்டி மதுரகாளியம்மன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கோவிலுக்கு பெரம்பலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர். அம்மனுக்கு மதியம் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தை மாத அமாவாசையையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.