கரூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கரூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையொட்டி நேற்று சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசியால் மாலை உள்பட பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.