பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
புரட்டாசி சனிக்கிழமை
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் அருகே மின்னல் சாலையில் அமைந்துள்ள வாமன நாராயண சாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இந்தநிலையில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி திருப்பதி வெங்கடாஜலபதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மோகனூர்
மோகனூர் ஒன்றியம் அணியாபுரம் அடுத்த தோளூர் சருவமலையில் அலமேலு மங்கை ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி அலமேலு மங்கை ரங்கநாதர் சாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.