பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-09-23 13:24 GMT

செங்கம்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் அமைந்துள்ள பழமையான பூதநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பூத நாராயண பெருமாளுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

செங்கத்தில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் கோவில் உட்பிரகாரத்தில் உற்சவமூர்த்திகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல கொசப்பாளையம் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், தச்சூர் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவில், சத்தியமூர்த்தி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பெருமாள் கோவில், இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை முதல் இரவு வரை பஜனை கோஷ்டியினரின் பக்தி சொற்பொழிவு, பஜனை பாடல்கள் நடந்தது.

சேவூரில் உள்ள பெருமாள் கோவில், எஸ்.வி.நகரத்தில் உள்ள பத்மாவதி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத செங்கல்வாய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

போளூர்

போளூரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

குண்ணத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்