பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-10-07 18:45 GMT

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையான நேற்று தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் அதிகாலையில் கோ பூஜை, விசுவரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள அக்கினி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் எள், எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். அனைவருக்கும் சுண்டல், கேசரி, பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கழுகாசலமூர்த்தி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர்.

கோவில்களில் உள்ள கருடன் சன்னதி முன்பு பெண்கள் நெய்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும், கோவில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்