புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-10-08 19:53 GMT

3-வது சனிக்கிழமை

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் ஆஞ்சநேயருக்கு பால், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர்

இதேபோல மோகனூர் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வெங்கட்ரமண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் மோகனூர் அடுத்துள்ள வலையபட்டி கஸ்தூரி மலையில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்