சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம்

விழுப்புரம் மாவட்ட தொழில் மையத்தில் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம் நாளை நடைபெற உள்ளது.

Update: 2023-09-24 18:45 GMT

 விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தின் வழியாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத்திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத்திட்டம், குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டங்களின் கீழ், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் உணவுப் பதப்படுத்தல், மாவு மில், அரிசி ஆலை, அழகு நிலையம், உடற்பயிற்சிக்கூடம், லேத், என்ஜினீயரிங் ஒர்க்ஷாப், ஸ்கேன் சென்டர், செக்கு ஆலை, மளிகைக்கடை, ஸ்டேஷனரி கடை, பேன்சி ஸ்டோர், மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை உள்ளிட்டஅனைத்து வகை உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டங்களை தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்து தரப்படும். வயது வரம்பு, கல்வித்தகுதி, திட்டத்தொகை மற்றும் மானிய அளவு உள்ளிட்டவை திட்டத்துக்கு திட்டம் மாறுபடும். பொதுவாக 18 வயதுக்கு மேற்பட்ட, 55 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்பெறலாம். கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி. ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 கோடி வரை மதிப்புள்ள திட்டங்களுக்கு 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியம் உண்டு.

சிறப்பு கடன் முகாம்

இத்திட்டங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறபோதிலும் திட்டங்களின் கீழ் பயன்பெற ஏதுவாக சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சுயவேலைவாய்ப்பு திட்டத் தொழிற்கடன் முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் தேவை, விருப்பம், தகுதி மற்றும் சூழலைப்பொறுத்து உரிய சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வழிகாட்டுதல் வழங்கப்படுவதுடன் கடன் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். விண்ணப்பம் பதிவு செய்ய ஆதார், ரேஷன் அட்டை, கல்வித்தகுதிச் சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, வகுப்புச்சான்று, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை போன்ற ஆவணங்கள் தேவைப்படும். வங்கி அலுவலர்களுடன் பேசி, தகுதியின் அடிப்படையில் கடனுதவி விரைந்து கிடைக்க வழிவகை செய்யப்படும். எனவே இம்முகாமில் தொழில் மற்றும் வணிகத்திட்டங்களை மேற்கொள்வதில் ஆர்வமுடைய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 9443728015 என்ற செல்போன் எண் மூலமாகவோ அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்