ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை திருவண்ணாமலைக்கு பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை திருவண்ணாமலைக்கு பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

Update: 2023-06-09 07:26 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில், கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு தெற்கு ரெயில் நிர்வாகம் கால அட்டவணை வெளியிட்டு உள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை வரும் ரெயில் பவுர்ணமி நாளன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து விழுப்புரம் வரும் ரெயில் அங்கிருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி நாட்களில் சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும்.

தொடர்ந்து அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும்.

தொடர்ந்து அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மேலும் விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் பவுர்ணமி நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி நாட்களில் விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும். பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு சென்றடையும். தொடர்ந்து அங்கிருந்து வழக்கம் போல் மயிலாடுதுறை செல்லும்.

இந்த சிறப்பு ரெயில்கள் ஜூலை மாதத்தில் 2 மற்றும் 3-ந் தேதிகள், 30 மற்றும் 31-ந் தேதிகள், ஆகஸ்டு மாதத்தில் 30 மற்றும் 31-ந் தேதிகள், செப்டம்பர் மாதத்தில் 28 மற்றும் 29-ந் தேதிகள், அக்டோபர் மாதத்தில் 27 மற்றும் 28-ந் தேதிகள், நவம்பர் மாதத்தில் 26 மற்றும் 27-ந் தேதிகள், டிசம்பர் மாதத்தில் 25 மற்றும் 26-ந் தேதிகள் ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்