வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
ஆடி மாத பவுண்மியை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
ஆடி மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவு பெறுகிறது.
அதனைத்தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கால அட்டவணை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் அந்த ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும்.
பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் (2-ந் தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.
மெமு ரெயில்
அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்த 1-ந் தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும்.
பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
அதேபோல் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 1-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.
பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் (2-ந் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.