விமான நிலையத்தில் மீட்பு பணி குறித்து சிறப்பு பயிற்சி
வேலூர் விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
விமான நிலையம்
வேலூரை அடுத்துள்ள அப்துல்லாபுரத்தில் பயன்பாடற்று கிடந்த இந்த விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. பல ஆண்டுகள் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓடுதளம், டெர்மினல் கட்டிடம், தளவாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் விமான நிலையம் செயல்பட கூடுதல் நிலம் தேவைப்பட்டதால், விமான நிலைய பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து நில தேவையை நிறுத்திவைத்துவிட்டு பிற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையம் இன்னும் சில மாதங்களில் செயல்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
மீட்பு பணி குறித்து பயிற்சி
இந்த நிலையில் விமான நிலையத்தில் 10 தீயணைப்பு வீரர்களுக்கு மீட்புபணி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
விமான நிலையத்தில் ஏதேனும் அவசர காலங்களில் மீட்பு பணி என்பது முக்கியமானது. சாதாரண இடங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணி போன்று விமான நிலைய மீட்பு பணி இருக்காது. இந்த மீட்பு பணிக்கு தனித்துவ பயிற்சி என்பது அவசியம். எனவே அதற்காக 10 தீயணைப்பு வீரர்களுக்கு கடந்த ஒரு வாரமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி அவர்களுக்கு ஒரு மாதம் வழங்கப்படும்.
இதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும், பயணிகளை பாதுகாப்பாக மீட்பது?, தீயை அணைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு வாகனத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சிகள் விமான ஆணையரக குழுவினரால் வழங்கப்படுகிறது. விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அங்கு அவர்களை பணியில் அமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.