உறவினர்கள் குறித்த விவரம் அறிய சென்னையில் இருந்து சிறப்பு ரெயிலில் சென்ற 6 வடமாநிலத்தவர்கள்

உறவினர்கள் குறித்த விவரம் அறிய சென்னையில் இருந்து சிறப்பு ரெயிலில் சென்ற 6 வடமாநிலத்தவர்கள் புறப்பட்ட இந்த சிறப்பு ரெயில் அதிகாலை 4 மணிக்குள் புவனேஸ்வர் சென்றடையும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.

Update: 2023-06-03 22:33 GMT

ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்தும், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை பார்ப்பதற்கும் செல்வதற்கு ஏதுவாக ரெயில்வே நிர்வாகம் நேற்று சிறப்பு ரெயிலை இயக்கியது.

அவ்வாறு பார்க்க செல்ல விரும்புபவர்கள் இந்த ரெயிலில் செல்லலாம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, உமேஷ் குமார் சிங், அனில் ராமத், லட்சுமி ராமத், சந்தோஷ் ராமத், சுனில் ராமத், வினோத் சவுத்ரி ஆகிய 6 வட மாநிலத்தவர்கள் சென்னையில் இருந்து சிறப்பு ரெயிலில் ஏறி பயணித்தனர். அதே ரெயிலில் காலையில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய இருந்தவர்களுக்கும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தவகையில் அவர்களும் சேர்ந்து பயணித்ததை பார்க்க முடிந்தது.

இதில் வாலாஜாபாத்தில் உள்ள ஷூ கம்பெனியில் பணிபுரிந்து வரும் உமேஷ்குமார் சிங்கின் சகோதரர் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்த நிலையில் விபத்தில் சிக்கியுள்ளார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் செல்வதாகவும் உமேஷ்குமார் சிங் கூறினார். இதேபோல், சுனில் ராமத்தின் உறவினர்கள் 2 பேர் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை பார்க்க செல்வதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று இரவு 7.20 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்குள் புவனேஸ்வர் சென்றடையும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர். இதற்கான உரிய ஏற்பாடுகளை செய்திருந்த அதிகாரிகளுக்கு ரெயிலில் பயணித்தவர்கள் நன்றியை தெரிவித்தனர்.

இந்த சிறப்பு ரெயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு டிக்கெட் உறுதியான நிலையில், அதே டிக்கெட் எண்ணில் மற்றொருவருக்கும் உறுதியாகியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட ரெயிலின் டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டார். டிக்கெட் பரிசோதகர் வடமாநிலத்தவர் என்பதால், அவரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லாமல் போனது. வேறு வழியில்லாமல் விரக்தியோடு அதே ரெயிலில் குழந்தையுடன் ஏறி பயணித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்