கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு குழு - ரெயில்வே போலீஸ் நடவடிக்கை
கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 15 பேர் கொண்ட குழுவை ரெயில்வே போலீஸ் அமைத்துள்ளது.;
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்டிரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடத்திலும் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். நெரிசல் மிகு நேரங்களில் திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் இந்திராநகர் ரெயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். இதில், ரெயிலில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பிரீத்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரீத்தி சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மின்சார ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 15 போலீசார் கொண்ட குழுவை ரெயில்வே போலீஸ் அமைத்துள்ளது.
இதுகுறித்து, ரெயில்வே போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் சேவையில் மொத்தம் 140 ரெயில் சேவைகள் உள்ளது. 17 ரெயில் நிலையங்கள் உள்ளது. சுமார் 3 லட்சத்திற்கும் குறையாமல் பயணிகள் இந்த தடத்தில் பயணம் செய்கிறார்கள். பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டி திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 15 போலீசார் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரெயில் நிலையங்கள் மற்றும் நடைமேடைகளில் அலுவலக நேரங்கள், இரவு நேரங்களில் பணியில் இருப்பார்கள். குறிப்பாக, பெண்களின் பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பெண் போலீசார், பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் பயணிப்பார்கள். பயணிகள் அவசர உதவிக்கு 1512 மற்றும் 99625 00500 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.