சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை;
கும்பகோணம்:
பாஸ்போர்ட் விண்ணப்ப விசாரணைக்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பாஸ்ேபார்ட்டுக்கு விண்ணப்பம்
தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பூந்துருத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் மணிகண்டன். இவர் வெளிநாடு செல்வதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவா அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார்.
இவருடைய பாஸ்போர்ட் விண்ணப்ப மனு திருவையாறு சரகம் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டது. அப்போது நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ஜார்ஜ்(வயது 51), மணிகண்டனுக்கு போன் செய்து 2 பாஸ்போட் சைஸ் புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் 2 நபர்களை சாட்சிக்கு அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
ரூ.500 லஞ்சம் கேட்டார்
அதன்படி மணிகண்டன் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜை பார்த்துள்ளார். அப்போது ஜார்ஜ், மணிகண்டனிடம் ரூ.500 லஞ்சம் கொடுத்தால் தான் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை விசாரணை முடித்து அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து மணிகண்டன் திரும்பி வீட்டிற்கு வந்து விட்டு ஒரு நாள் கழித்து (அதாவது 21-ந ்தேதி) மீண்டும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜிடம் கேட்டுள்ளார். அப்போதும் ஜார்ஜ், ரூ.500 லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே பாஸ்போர்ட் விண்ணப்பத்தை விசாரணை முடித்து அனுப்புவேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ரூ.500 லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா நேற்று தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜார்ஜூக்கு ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7-ன்படி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனையும், ஊழல் தடுப்பு சட்டம் பிரிவுகள்13(2)-ன்படி ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.