கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-01 18:45 GMT

பொள்ளாச்சி

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயர் கோவில்

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சி அருகே சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அங்கலகுறிச்சி அருகே மலைஉச்சியில் நந்தகோபால்சாமி கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மலை ஏறி வந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விளக்கேற்றி வழிபாடு

பொள்ளாச்சி கடை வீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெருமாளுக்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிப்பட்டனர்.

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் ராமர் பண்ணை கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்