கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-07-22 17:11 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 8 மணிக்கு கரகம் வீதிவலம் வருதல் நடந்து பகல் 12 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ், ஒரு கொப்பறையில் ஊற்றி வார்க்கப்பட்டு அம்மனுக்கு படையலிட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சூரியநாராயணன், ஆய்வாளர் செல்வராஜ், பரம்பரை அறங்காவலர் வேலவன் ஆகியோர் செய்திருந்தனர்.

மாம்பழப்பட்டு முத்தாலம்மன்

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு அலகு குத்துதல், புலி வேடம், குறவன், குறத்தி வேடம், சாமிகள் வேடம் மற்றும் பல்வேறு வேடங்களுடன் அம்மனின் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் வேண்டுதலின்பேரில் முதுகில் அலகு குத்தி வாகனங்களில் கட்டி தேர் இழுத்தும், தூக்குத்தேர் தூக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனை தொடர்ந்து கோவிலில் மாவிளக்கு போட்டும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். பின்னர் முத்தாலம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பகல் 12 மணியளவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொங்கலிட்டு வழிபாடு

செஞ்சியை அடுத்த மேலச்சேரி காப்புக்காட்டில் உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வழிபட்டனர்.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களிலும் நேற்று ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்