சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை

மகா சிவராத்திரி விழாவையொட்டி பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-02-19 18:45 GMT

பொள்ளாச்சி

மகா சிவராத்திரி விழாவையொட்டி பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு பூஜை

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெற்றது. பொள்ளாச்சி அருகே உள்ள டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே மாகாளியம்மன் கோவிலில் உள்ள ருத்ரலிங்கேஸ்வரருக்கு 4 கால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

4 கால யாக பூஜை

கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் உள்ள மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 11.45 மணிக்கு 3-ம் கால பூஜையும், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவில்பாளையம், காளியண்ணன் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பல்வேறு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலோகநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் விடிய விடிய பஜனை பாடல்கள் பாடி வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்