குன்றக்குடி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

தைப்பூச திருவிழாவையொட்டி குன்றக்குடி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-05 18:45 GMT

காரைக்குடி

தைப்பூச திருவிழாவையொட்டி குன்றக்குடி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குன்றக்குடி முருகன் கோவில்

காரைக்குடி அருகே உள்ளது குன்றக்குடி. இங்கு புகழ்பெற்ற சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவில் தைப்பூசத்திருவிழா கடந்த 26-ந்தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு 8 மணிக்கு சண்முகநாதபெருமான், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளிக்கேடகத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

6-ம் திருநாள் அன்று இரவு தங்கரதத்திலும், 8-ம் திருநாள் அன்று வெள்ளி ரதத்திலும் சண்முகநாதபெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாள் அன்று தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பாதயாத்திரையாக சென்று முருகனை வணங்கினர். தொடர்ந்து சின்னக்குன்றக்குடி தோனாற்றில் தீர்த்தவாரி உற்சவம் மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு பூஜை

இந்த நிலையில் தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கோவிலுக்கு வந்திருந்தனர். இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல் குன்றக்குடி வந்த பக்தர்கள் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் தண்ணீர்மலை செட்டியார் மற்றும் சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர் தலைமையில் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்