திருப்புவனம்,
திருப்பாச்சேத்தியில் பிரசித்தி பெற்ற மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகியநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கஷ்ட நிவாரண பைரவர் சாமிக்கு என தனி சன்னதி உள்ளது. பைரவர் சாமிக்கு நாய் தான் வாகனம். பெரும்பாலும் பைரவர் சாமியுடன் ஒரு நாய் வாகனம் மட்டும் தான் கோவில்களில் இருக்கும். ஆனால் இங்குள்ள கஷ்ட நிவாரண பைரவருக்கு இருபுறத்திலும் நாய் வாகனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி கஷ்ட நிவாரண பைரவர் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்னதாக பக்தர்கள் பூசணிக்காயில் எண்ணெய், நெய் தீபம், தேங்காய் தீபம், மண்சட்டி தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இதையொட்டி சாமிக்கு மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.