கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-09-12 18:33 GMT

ஆவணி பிரதோஷம்

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று சிவன் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர்,

பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரர் உள்ளிட்ட கோயவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

இதேபோல் ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு தயிர், பால், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் நந்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. விழாவில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி அசலதீபேஸ்வரர் மற்றும் நந்திபகவானுக்கு பால், தயில், இளநீர், மஞ்சள், சந்தானம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடந்தது. சாமி உட்பிரகாரத்தில் வாகனத்தில் மூன்று முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசணம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்