தகுதியான பயனாளிகளுக்கு அரசு பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு பலன்கள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Update: 2022-12-17 19:52 GMT

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆய்வு

சென்னை தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் அரசு முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன், துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

மாவட்ட அளவில் அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக மாநில அளவில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாகவும், கள அளவில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கள ஆய்வு அலுவலர்களாகவும் அரசு நியமித்துள்ளது.

இவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கைகளை இத்துறை உரிய முறையில் தொகுத்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து அதன் அடிப்படையில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அரசு திட்டங்கள்

மேலும், இத்துறையினால் முன்னெடுக்கப்பட்ட சில முத்தாய்ப்பான முயற்சிகளான மாவட்டங்களின் வளர்ச்சிக்கான 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்', இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான 'நான் முதல்வன்' திட்டம், இளம் வல்லுநர்களின் திறன்மிகு ஆற்றலை அரசுத்திட்டங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டம்' ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் துறையினால் எடுத்துரைக்கப்பட்டது.

அரசு நிர்வாகத்தில் தரவு சார்ந்த மேலாண்மையின் பயனாக அரசின் திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் நடைமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கண்காணிப்பு நடவடிக்கை

ஆய்வின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம், முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அத்திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்தும், இத்திட்டங்களை கண்காணிக்கும் விதம் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

இவைத்தவிர, பல்வேறு துறைகளின் முத்திரை பதிக்கும் திட்டங்கள், தகவல்தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசின் கண்காணிப்பு அமைப்பாக திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அறிவிப்புகள் ஆணைகளோடு நின்றுவிடாமல் அவை கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முத்திரை பதிக்கும் முத்தாய்ப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இத்துறை இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அரசின் திட்டங்கள் வெற்றியடைய சம்பந்தப்பட்ட துறைகளை இத்துறை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தகுதியுள்ள பயனாளிகள்

தகவல்தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேருவதை இத்துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தின்போது அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் துறையின் அரசு சிறப்புச் செயலாளர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னெசன்ட் திவ்யா மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்