ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-01-01 18:30 GMT

சிறப்பு பிரார்த்தனை

ஆங்கில புத்தாண்டையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பெரம்பலூரில் உள்ள புனித பனிமய மாதா திருத்தலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நற்கருணை ஆராதனையும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. திருத்தலம், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலம் ஆகிய கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பெரம்பலூரை அருகே பாளையத்தில் உள்ள புனித சூசையப்பர் திருத்தலத்தில் புத்தாண்டு தின விழாவையொட்டி நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

போலீசார் வாகன தணிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு ஏற்கனவே போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரைகள் கூறப்பட்டிருந்தது. மேலும் புத்தாண்டு தினத்தில் வழக்குகள் பதிவு செய்வதை தவிர்க்கவும், விபத்துகள் மற்றும் புத்தாண்டை கொண்டாடும் நோக்கத்தில் விரும்பத்தகாத சம்பவங்களை நிகழ்வதை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் 280 போலீசார் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை சிறப்பு ரோந்து பணியிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். இரவு 12 மணிக்கு முன்னதாகவும், அதன் பிறகும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சாலைக்கு வந்த சில இளைஞர்களை போலீசார் எச்சரித்து, அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் ஒத்துழைப்பினால் பெரம்பலூர் மாவட்டத்தில் அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.

கேக் வெட்டி உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்

2022-ம் ஆண்டு முடிவடைந்து நேற்று 2023 புத்தாண்டு தொடங்கியது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக பெரம்பலூரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் சிறுவர்கள், இளைஞர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு கூடினர். நள்ளிரவு கடிகாரத்தில் 12 மணியை தொட்ட உடனே பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் உற்சாகமாய் கொண்டாடினர். பிறகு ஒருவொருக்கு ஒருவர் கேக்கை ஊட்டிவிட்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் தங்களது வீடுகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு நேரத்தில் ஆர்வத்துடன் வண்ண வண்ண கோலங்களை போட்டனர். மேலும் பலர் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர், டெலகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுக்கு நள்ளிரவு முதலே பகிர்ந்து கொண்டனர். கேளிக்கை விடுதிகளில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.

இறைச்சி கடைகளில் கூட்டம்

ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெரும்பாலான பொதுமக்கள் மதியம் வீட்டில் அசைவ உணவை சமைத்து சாப்பிட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் மது விற்பனையும் படுஜோராக நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்