மழை வேண்டி சிறப்பு தொழுகை

சேரன்மாதேவி, பாளையங்கோட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2023-08-27 18:52 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி, பாளையங்கோட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சேரன்மாதேவி

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு குறைந்து வருவதாலும், பருவ மழை பெய்யாததால் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. கார் பருவ சாகுபடியும் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு எழும் அபாயமும் உள்ளது.

இந்தநிலையில் அம்பை வட்டார ஜமாத்துல் உலமா சபை, சேரன்மாதேவி முஸ்லிம் ஜமாத் சார்பில், சேரன்மாதேவி பக்கீர் பாவா தர்கா வளாகத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. வட்டார ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் ஷேக் மீரான் மிஸ்பாஹி தலைமை வகித்தார். சேரன்மாதேவி முஸ்லிம் ஜமாத் தலைவர் அபுல் ஹசன் முன்னிலை வகித்தார். இமாம்கள் மீரான்கனி, ஜாஹீர் உசேன், பீர்முகம்மது, முகம்மது யூசுப் ஆகியோர் பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சேரன்மாதேவி, பத்தமடை, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இருந்து திரளான முஸ்ஸிம்கள் கலந்துகொண்டனர்.

பாளையங்கோட்டை

இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாளையங்கோட்டை கோட்டூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் புகாரி சிறப்பு தொழுகையை தொடங்கி வைத்தார். இதில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்