ரம்ஜான் பண்டிகையையொட்டிபள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-22 18:45 GMT

ரம்ஜான் பண்டிகை

தமிழகம் முழுவதும் நேற்று முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

நாமக்கல்

ரம்ஜான் பண்டிகையையொட்டி நாமக்கல் - சேலம் ரோடு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையை இமாம் சாதிக் பாட்ஷா நடத்தினார். இந்த சிறப்பு தொழுகையில் பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி தவுலத்கான் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். முன்னதாக அவர்கள் நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக தொழுகை நடந்த இடத்திற்கு வந்தனர்.

இதேபோல் நேற்று நாமக்கல் கோட்டை பள்ளிவாசல், மாருதிநகர் பள்ளிவாசல் என அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

பரமத்திவேலூர், திருச்செங்கோடு

பரமத்திவேலூர் ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையையொட்டி அமைதி ஊர்வலம் மற்றும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பரமத்திவேலூர் ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலை, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளி வாசலை வந்தடைந்தது. ரமலான் பண்டிகையையொட்டி ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ரமலான் வாழ்த்துகளை பரிமாரிக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி தலைவர் சவான் சாகிப், நிர்வாக கமிட்டி செயலாளர் இக்பால், ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல் பரமத்தி மற்றும் பாலப்பட்டியிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதேபோல் திருச்செங்கோடு சங்ககிரி ரோடு ஈத்கா மைதானத்திலும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடந்தது. திருச்செங்கோடு டவுன் ஜாமியா மஸ்ஜித் முத்துவல்லி முபாரக் அலி தலைமையில் ஹஜ்ரத் ஜலாலுதீன் சிறப்பு தொழுகையை நடத்தினார். இதனை அடுத்து பாத்திமா பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்து வந்தவர்கள் ஒருவரை ஒருவர் தழுவியும் கைகுலுக்கியும் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம்

நாமகிரிப்பேட்டை பஸ் நிலையம் அருகில் பழமையான மஜீத் உள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் தொப்பம்பட்டி, ஜேடர்பாளையம், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, ஆயில்பட்டி, முள்ளுக்குறிச்சி உட்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை செய்தனர். பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மஜீத் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

அதேபோல் பள்ளிபாளையம் ராஜீ வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் மசூதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முத்தவல்லி குலோப்ஜாம் தலைமையில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு வருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்