உடுமலை திருப்பதி கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகபூஜை

உடுமலை திருப்பதி கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகபூஜை

Update: 2023-01-20 14:12 GMT

போடிப்பட்டி

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக உடுமலை திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஹயக்ரீவர் பூஜை

வேதங்களின் துணையுடன் படைப்பு தொழிலை மேற்கொண்டு வருபவர் பிரம்மதேவன். தேவர்களை துன்புறுத்தி வந்த மது, கைடபர் என்னும் அசுரர்கள் பிரம்மதேவனிடமிருந்து வேதத்தைத் திருடிச் சென்று ஒளித்து வைக்கின்றனர். தேவர்களால் மீட்க முடியாத வேதத்தை மகாவிஷ்ணு ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டார். அவருடைய உக்கிரத்தைத் தணிப்பதற்காக அன்னை மகாலட்சுமி அருகில் வந்த போது, அவரை மடியில் அமர்த்தி லட்சுமி ஹயக்ரீவராக காட்சியளித்தார்.

கல்வி கடவுளான சரஸ்வதிதேவிக்கு குரு இந்த ஹயக்ரீவர் ஆகும்.கல்வி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் மும்மூர்த்தியான லட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.அதனடிப்படையில் 10 ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்காக உடுமலை திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தொடங்கிய யாக பூஜை நேற்று காலை 10 மணியளவில் நிறைவு பெற்றது.

மாணவ-மாணவிகள் பங்கேற்பு

இந்த யாக பூஜையை ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தலைமையேற்று நடத்தினார்.மேலும் யாக பூஜையில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பூஜையில் வைத்து பிரார்த்திக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை வழங்கி ஆசி கூறினார்.நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்