மார்கழி மாத பிறப்பையொட்டி கரூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை
மார்கழி மாத பிறப்பையொட்டி கரூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.;
சிறப்பு அபிஷேகம்
கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. இதில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மார்கழி மாதம் முழுவதும் இக்கோவிலில் தினசரி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.உச்சிக்காலை பூஜை பிற்பகல் 12 மணிக்குள்ளும், அர்த்தசாம பூஜை இரவு 8 மணிக்குள்ளும் நடைபெறும்.
புனிதநீராடினர்
மார்கழி மாதத்தின் முதல் நாள் காலை கடம்பர், கட்டுச்சி சொக்கர், அந்தி திருஈங்கோய்நாதர் வணங்குவது சிறப்பாகும். அதாவது காலையில் குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரரையும், மதியம் அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரரையும், மாலை திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருஈங்கோய்மலையில் உள்ள மரகதாசலேசுவரரையும் வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும் என்பது ஜதீகம். இதைகடைபிடிக்கும் விதமாக மார்கழி மாதப்பிறப்பான நேற்று, பல ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பலர் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் புனிதநீராடினர். பின்னர் காலையில் கடம்பவனேசுவரரை வழிபட்டுவிட்டு, அய்யர்மலைக்கு நடந்துசென்று மலைமேல் உள்ள ரத்தினகிரீசுவரரை மதியம் வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள திருஈங்கோய் மலைக்கு சென்று மாலையில் மரகதாசலேசுவரரை வழிபட்டு சென்றனர்.
நொய்யல்-வேலாயுதம்பாளையம்
நொய்யல் அருகே நன்செய் புகழூர் அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டாதசபுஜ மகாலெட்சுமி துர்க்கா தேவி சரஸ்வதிக்கு மார்கழி மாத பிறப்பையொட்டி சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல் வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.