முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-09 20:15 GMT

கூடலூர்

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்களும் சிறப்பு வாய்ந்ததாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஆடி கிருத்திகையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.

கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் நந்தட்டி, சந்தன மலை, பந்தலூர், சூண்டி திருக்கல்யாணமலை உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

சிறப்பு பூஜை

ஆடி மாத கிருத்திகை நாளான நேற்று கோத்தகிரி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சந்தனம், குங்குமம், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் கோத்தகிரி அருகே நட்டக்கல் முருகன் கோவில், தங்கமலை முருகன் கோவில், கடைவீதி மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன், டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். மேலும் 40 அடி உயர முருகன் சிலையை பக்தர்கள வழிபட்டு சென்றனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்