விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

நீலகிரியில் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-09-18 22:30 GMT

கூடலூர்

நீலகிரியில் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

நீலகிரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. கூடலூரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சதுர்த்தியையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு மூஷிக வாகனத்தில் சக்தி விநாயகர் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூர்-தேவர்சோலை சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தங்க கவச அலங்காரம்

கோத்தகிரி டானிங்டன் மகா சக்தி கணபதி கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7.15 மணிக்கு அபிஷேக பூஜை, 9.15 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் கணபதி வீற்றிருந்து டானிங்டன், கேர்பெட்டா, காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில்கள், கடைவீதி, கொட்டகம்பை, தின்னியூர், சுள்ளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவீதி உலா

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊட்டி இரட்டை பிள்ளையார் கோவிலில் கடந்த வாரம் முதல் கணபதி ஹோமம், பூச்சொரிதல், தீபாராதனை, 108 கலச அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலையில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் செயல் அலுவலர் ஜெகநாதன், ஆய்வாளர் ஹேமலதா, தக்கார் கைலாசமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோடப்பமந்து ஆனந்த விநாயகர் கோவில், ஊட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கற்பக விநாயகர் கோவில், டேவிஸ் டேல் பஞ்சமுக விநாயகர் கோவில், லோயர் பஜார் விட்டோபா கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பந்தலூர் அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பாதிரிமூலா விநாயகர் கோவிலில் அதிகாலை 5.30 மணி முதல் கணபதி ஹோமம் கோவில் குருக்கள் பரமசிவம், ஜெகதீஸ் ஆகியோர் தலைமையில் நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் சேரம்பாடி விநாயகர் கோவில், பந்தலூர், அய்யன்கொல்லி, பிதிர்காடு உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்