அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-07-28 18:45 GMT

பொள்ளாச்சி


ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


ஆடி வெள்ளிக்கிழமை


ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதை யொட்டி பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது.


இதை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


சிறப்பு அலங்காரம்


பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிப்பட்டனர்.

ஜோதி நகர் விசாலாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

இதேபோன்று பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


சூலக்கல் மாரியம்மன்


ஆடி வெள்ளியை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப் பட்டது. அங்கு சுயம்புவாக உள்ள சூலக்கல் மாரியம்மனுக்கு பன்னீர், சந்தனம், பால், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சூலக்கல் மாரியம்மன் விபூதி மற்றும் மலர் அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக மதியம் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


பக்தர்கள் தரிசனம்


இதே போல் கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே உள்ள கரிய காளியம்மன் கோவிலில் காளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இது போல் கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், சிவலோக நாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மேலும் செய்திகள்