அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி வெள்ளி
மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை வந்தாலும் ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது.
நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில்களில் விளக்கு பூஜை, ஆடிவெள்ளி ஊஞ்சல் உற்சவ பூஜை, குங்கும அர்ச்சனை போன்றவை நடத்தப்பட்டு மகாதீப ஆராதனை நடத்தப்பட்டன. இதுதவிர அம்மன்கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.. விழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ருத்ரமாதேவி
ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள ருத்ரமாதேவி, உத்ரகாளி, மல்லம்மாள்காளி, வெட்டுடையாள் காளி, பெரியமாரியம்மன், உத்தரகோசமங்கை வராகி அம்மன உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பரமக்குடி
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதையொட்டி பரமக்குடி முத்தாலம்மன் கோவில், சின்னக்கடை துர்க்கை அம்மன் கோவில், கவுரி அம்மன் கோவில், வன சங்கரி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். பரமக்குடியில் இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் 14 கி.மீ. தூரம் உள்ள நயினார் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
பொதுவாக ஆடிவெள்ளி என்பது பருவமழையின் தொடக்க கொண்டாட்டமாக கருதப்படுகிறது. சூரியனின் தெற்கு நோக்கிய பயணத்தை குறிக்கும் தட்சிணாயனம் எனும் நிகழ்வாகும். இந்த மாதத்தில்தான் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழைபொழிந்து பூமி குளிர்ச்சி அடைவதோடு ஆடி 18 அன்று விவசாய பணிகளை தொடங்குவது வழக்கமாகும்.