அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை

Update: 2023-01-21 10:38 GMT

தளி

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்தனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவில்

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காண முடியாது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. மேலும் இங்குள்ள பஞ்சலிங்க அருவி வனப்பகுதியில் உள்ள ஆறுகளின் உதவியுடன் மூலிகை தண்ணீரை அளித்து வருகிறது. இயற்கை சூழலில் அமைந்துள்ள அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்தோடு வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குறிப்பாக ஆடி மற்றும் தை மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

சாமி தரிசனம்

இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளிமாவட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற தை அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மதியம் முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குதிரைகள் மற்றும் மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தனர். பின்னர் அவர்கள் இரவு முழுவதும் பெருமாள் கோவில் மற்றும் அணைப் பகுதியில் தங்கினர்.பின்னர் நேற்று அதிகாலையில் எழுந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

சப்பரம்

மேலும் மும்மூர்த்திகள் குன்றில் அமர்ந்து அருள்பாலித்து வருவதால் கோபுரம் கட்டப்படவில்லை.இதனால் கோபுரத்துக்கு பதிலாக 200 ஆண்டுகளாக காகிதம், பாய் மற்றும் மூங்கில்களால் கோபுர வடிவில் கலசங்களுடன் செய்யப்பட்ட சப்பரத்தை குன்றின் மீது வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று குன்றின் மீது வைக்கப்பட்ட சப்பரத்தை புதுப்பிப்பதற்காக கட்டளைதாரர்கள் உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் கிராமத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து சுமார் ஒரு மாதத்திற்கு சப்பரத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும்.

அதன் பின்பு புதுப்பிக்கப்பட்ட சப்பரத்தை மாசி மாதம் வருகின்ற மகாசிவராத்திரியன்று காலை பூலாங்கிணரில் இருந்து வேலூர், வாளவாடி, தளி ஆகி கிராமங்கள் வழியாக திருமூர்த்தி மலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று பூலாங்கிணரில் இருந்து வருகை தந்த கட்டளைதாரர்கள் கோவிலின் மீது சேதமடைந்த சப்பரத்தை புதுப்பிப்பதற்காக எடுத்துச்சென்றனர்.தை அமாவாசையையொட்டி தளி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

----------

பாக்ஸ்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பச்சரிசிமாவு, தேன், கரும்பு சக்கரை, நெய், எள், பால், தயிர் உள்ளிட்டவற்றால் உருவாக்கப்படுவதே பிண்டம் ஆகும். அதை முன்னோர்களுக்கு செலுத்தி அவர்களது ஆசியை பெறுவதில் தை மற்றும் ஆடி அமாவாசை நாட்கள் முக்கியத்துவம் வைக்கிறது. அன்றைய தினம் ஆற்றங்கரையில் அமர்ந்து வாழை இலையை விரித்து மாவிலை தேங்காயை கொண்டு கலசம் வைத்து பாகற்காய், அகத்திகீரை, புடலை, கேரட், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுடன் வேட்டி துண்டு சேர்த்து மந்திரங்கள் ஓதி இருபத்தேழு தலைமுறை முன்னோர்களுக்கும் பிண்டம் வைத்து உபசரிக்க வேண்டும்.அதன் பின்பு வீட்டிற்கு சென்று படையலிட்டு காகத்திற்கு அன்னம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதனால் உள்ளம் மகிழும் முன்னோர்கள் தங்களது சந்ததியினரை நோய்நொடியின்றி சகலவிதமான வசதிகளுடன் வாழ வைப்பதாக ஐதீகம்.

-

Tags:    

மேலும் செய்திகள்