பரமத்திவேலூர்
பரமத்திவேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்தர் மடாலயத்தில் ஆவணி மாத சதுர்த்தியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி திருஞானசம்பந்தர் மடாலயத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு பக்தர்கள் தேவாரம் - திருவாசகம் ஓதினர். அதனைத்தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூஜையும் உடன் அன்னம் பாலிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் வேலூர், பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை திருஞானசம்பந்தர் மடாலய சிவபக்தர்கள் செய்திருந்தனர்.