சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை
பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.;
பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
பங்குனி உத்திர திருவிழா
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பங்குனி உத்திரத்தன்று தங்களுடைய சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். இரவில் தங்களது காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு படையல் பூஜை செய்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் வரை நடந்தது. நேற்று முன்தினம் சாஸ்தா கோவிலுக்கு வந்தவர்கள் நேற்று இரவு வரை தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
நேற்று நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துறை சாஸ்தா கோவில், களக்காடு அருகே சிங்கிகுளம் ஆரியங்காவு சாஸ்தா கோவில், சீவலப்பேரி அருகே மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், கங்கைகொண்டான் அனைத்தலையூர் தென்னூர் அய்யனார் சாஸ்தா கோவில், கைலாசபுரம் சடை உடையார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூைஜகள் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார்கள். இரவில் காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதேபோல் பாளையங்கோட்டை அருகே திருமலைகொழுந்துபுரம் மணக்காடு முருகஉடையார் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்துசாமி தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை அன்னதானம் நடந்தது.
உள்ளூர் விடுமுறை
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவிலான சாஸ்தா கோவிலுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.